விண்ணைத் தொடும் மலைகளால் மூன்று புறமும் சூழப்பெற்ற லூர்து நகரிலே 1844, ஜனவரி ஏழாம் நாள், பிரான்சிஸ் சுப்பீரோ, லூயிஸ் காஸ்தேரோ தம்பதியரின் ஆறு குழந்தைகளில் முதல் செல்வக்குழந்தையாக பிறந்தவரே, இறைவனின் அன்னையை பதினெட்டுமுறை காட்சியில் காணும் பேறுபெற்ற இறந்தும் அழியாத உடலைக் கொண்டிருக்கும் நம் புனிதை பெர்னதெத்.
புனிதை பிறப்பதற்கு சிலகாலம் முன்பு வரை வசதியுடன் வாழ்ந்த குடும்பம், திடீரென தன் தந்தை பணிபுரிந்த இடத்தில் தவறாக குற்றம் சாட்டப்பட்டு சிறைபிடிக்கப்பட்டதால் மிகவும் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டு, மனிதனாக மண்ணில் பிறக்க மாட்டுத் தொழுவத்தை தேர்ந்த இறைமகன் இயேசுவைப் போன்று சிறுகுடிசையிலே தஞ்சம் புகுந்தது.
நான் உன்னைப் புடமிட்டேன், ஆனால் வெள்ளியைப்போல் அல்ல துன்பம் என்னும் உலை வழியாய் உன்னைத் தேர்ந்தெடுத்தேன். (எசா 48:10). சிறு வயதிலிருந்தே ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்ட நம் புனிதை பெர்னதெத்தை 1854ஆம் ஆண்டில் பெருந்தொற்றாக பரவி வந்த காலரா நோயும் விட்டுவைக்கவில்லை. வறுமையும், நோயும் இணைந்து வாழ்வில் துன்பங்களுக்கு மேல் துன்பங்களை அனுபவித்தார்.
காலை முதல் மாலை வரை வியர்வை சிந்தி உழைக்கும் பெற்றோரின் பாரத்தை குறைக்கப் பள்ளிப்படிப்பைத் துறந்த நம் புனிதை சிறுவயதிலே தன் தம்பி தங்கைகளைக் கவனிக்கும் பொறுப்பை ஏற்றார். எழுதவோ, வாசிக்கவோ தெரியாதிருந்தும் செபிக்க நன்கு கற்றிருந்த புனித பெர்னதெத் தனது 14 வயதில் முதல் திருவிருந்தின் வழியாக இயேசுவின் உடலை உட்கொண்டு இறைப்பற்று மிகுந்து, நற்கருணை ஆண்டவர் என்னோடு இருக்க நான் ஏன் அஞ்சவேண்டும் என்று மனதைரியம் நிறைந்து வளர்ந்தார்.
1858ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ஆம் நாள் பனி படர்ந்த குளிரான நாளினில் புனிதையின் நோய்வாய்ப்பட்ட தந்தை கடுங்குளிரினால் அவதியுற்றார். அறையில் குளிர் போக்க அனல் மூட்டுவதற்காக இருந்த விறகு எல்லாம் தீர்ந்திருந்தது. நெருப்பு அணையும் தருவாயில் இருந்ததால் நெருப்பு மூட்டுவதற்காக விறகு சேகரிக்க கேவ் ஆற்றங்கரை பகுதிக்கு தனது தங்கை மேரி மற்றும் தோழி யோவான் அபாதி ஆகியோருடன் சென்றார். (அப்பகுதியில் இருந்த மசபியேல் என்னும் குகையிலே அன்னை கன்னி மரியா தோன்றி பெர்னதெத்திற்கு முதல் முறையாகக் காட்சி கொடுத்தார்.)
திடீரென பெருங்காற்று வீச திகிலுற்ற சிறுமிகள் வலுவான காற்று வீசியும் மரங்களின் இலைகள் அசையாமல் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். விண்ணக ஒளி முகந்தனில் ஒளிர, நீண்ட வெள்ளை நிற ஆடையணிந்து நீல நிற இடைக்கச்சையுடன், இரு பாதங்களிலும் மஞ்சள் நிற ரோஜா மலர்களுடன், கரத்தினில் செபமாலை ஏந்திய, அழகிய பெண் ஒருவர் அக்குகையில் திடீரென தோன்ற அக்காட்சியைக் கண்ட சிறுமிகள் திகைப்புற்றனர். இவ்வற்புத நிகழ்வே இறை அன்னை புனித பெர்னதெத்திற்கு அருளிய முதல் காட்சி, இதனைத் தொடர்ந்து 11.02.1858 முதல் 16.07.1858 வரை 18 முறை அன்னை நம்புனிதைக்குக் காட்சியளித்தார்கள்.
1854ஆம் ஆண்டு திருத்தந்தையால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட "மரியன்னை அமல உற்பவி” என்னும் மறை உண்மையை உறுதிப்படுத்தி "நாமே அமல உற்பவி” எனத் தன்னை காட்சியில் வெளிப்படுத்திய இறை அன்னை, அங்கே தனக்கு ஓர் ஆலயம் எழுப்பவும், தவம் செய்யவும் வலியுறுத்தினார். அன்னை பணித்தபடி 1868ஆம் ஆண்டு இக்குகையின் அருகே ஒரு சிற்றாலயம் எழுப்பப்பட்டது. அவ்விடத்தில் தோன்றிய அற்புத நீரூற்றானது இன்றும் பல்லாயிரக்கணக்கான நோயாளிகளுக்கு நலம் அளிக்கும் அருமருந்தாக உள்ளது.
தான் 18 முறை காட்சியில் கண்ட இறை அன்னையைப் போன்று கன்னியாக வாழ விரும்பியும் ஏழையாக, நோயாளியாக, படிப்பறிவற்றவராக இருந்ததால் கன்னியர் இல்லத்தில் சேரத் தயங்கிய பெர்னதெத், ஆயரின் ஆலோசனைக்கிணங்க, 1865இல் நேவேர் கன்னியர் இல்லத்தில் சேர்ந்தார். தாழ்ச்சி, அன்பு, பொறுமை, அமைதி, சகிப்புத்தன்மை போன்ற நற்பண்புகளை அணிகலனாக கொண்ட புனிதை நோயாளிகளைக் கவனிக்கும் பணியில் நியமிக்கப்பட்டார். வீண் பெருமையையும், புகழ்ச்சியையும் விரும்பாத நம் புனிதை 1876இல் லூர்து நகரில் எழுப்பப்பட்ட பேராலய திறப்பு விழாவில்கூட கலந்துகொள்ளாமல் கன்னியர் இல்லத்திலேயே இருந்து தன் இயல்பான பணிகளை ஆற்றும் அளவுக்கு எளிமையை ஆடையாக அணிந்திருந்தார். கீழ்ப்படிதலை மகுடமாக கொண்ட நம் புனிதை சபையின் சட்ட திட்டங்களை நுணுக்கமாக கடைபிடிப்பதில் கருத்தாயிருந்தார்.
பாவிகள் மனம் திரும்பவும், நோயாளிகள் நலம் பெறவும் இடைவிடாது செபித்து வந்த நம் புனிதை, சிறு வயது முதலே தன்னை வாட்டிய ஆஸ்துமா நோயினால் துன்புற்று, எலும்புருக்கி நோயாலும் தாக்கப்பட்டு தனது 35ஆவது வயதில் 16.04.1879 அன்று உயிர் துறந்தார்.
30 வருடங்களுக்குப் பின்பும் புனிதையின் உடல் அழியாமல் இருந்த அற்புதத்தைக் கண்ட திருத்தந்தை 11ஆம் பத்திநாதர் 1933 டிசம்பர் 8ஆம் நாள் அமல உற்பவி பெருவிழா அன்று பெர்னதெத்தை புனிதர் நிலைக்கு உயர்த்தினார். அவரின் உடல் இன்றும் அழியாமல் நேவேர் கன்னியர் மடத்தில் உள்ளது.