• mangalakuntuparish@gmail.com
  • 04651 - 224395

 

புனித பெர்னதெத் ஆலயம் மங்கலக்குன்று

 

பங்கின் வரலாறு

முக்கடலும், முத்தமிட்டு சங்கமிக்கும் முத்தான குமரியில், குன்றுகளும், மரங்களும் மண்ணை அலங்கரிக்க, இயற்கை எழில் கொஞ்சும் உயரமான சிற்றூரே மங்கலக்குன்று. வளங்கள் பல இருந்தும் இறைவனை வழிபட ஆலயம் ஒன்று இல்லாததே இங்கு வாழ்ந்த 19 ஆம் நூற்றாண்டு பாரம்பரிய கத்தோலிக்க மக்களின் பெரும் மனக்குறையாக இருந்தது. இறைத்தாகம் கொண்ட நல் உள்ளங்களின் ஒற்றுமை உணர்வும், தியாகச் செயல்பாடுகளும், 1932 இல் ஒரு ஓலைக்குடிசையால் ஆன ஆலயமாக உருவெடுத்தது. மாட்டிடைக் குடிலில் மன்னவர் உதித்த டிசம்பர் 24 ஆம் நாள் நள்ளிரவு திருப்பலியே இவ்வாலயத்தின் முதல் திருப்பலியாக மாத்திரவிளை பங்கு தந்தை அருட்பணி. தாமஸ் மத்தியாஸ் அவர்களால் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு மங்கலக்குன்று மிடாலம் பங்கின் கிளைப்பங்காக அங்கீகாரம் பெற்று குளச்சல் மறைவட்டத்தில் சேர்க்கப்பட்டது.

பலவித இன்னல்களுக்கு மத்தியிலும் ஓலையால் வேயப்பட்ட இந்த ஆலயத்தைப் பாதுகாக்க போராடிய மக்கள் புதிய பொலிவுடன் ஓட்டினால் ஆன ஆலயம் கட்ட தீரமானித்தனர். இன்று நம் ஆலயம் அமைந்திருக்கும் இந்த இடமானது நல்லுள்ளம் கொண்ட பலரின் நன்தொடையால் விலையாகவும், இலவசமாகவும் வாங்கி சேர்க்கப்பட்டது. 1937 ஆம் ஆண்டு பணியில் இருந்த அருட்பணி. மேரி எப்ரேம் அவர்களின் வழி காட்டுதலாலும், இறைமக்களின் அயராத உழைப்பாலும் புதிய ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டு அன்றைய ஆயர், மேதகு. லாரன்ஸ் பெரைரா அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. 1933 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் நாள் புனித பெர்னதெத். புனிதையாக அறிவிக்கப்பட்ட அதே கால கட்டத்தில் எழுப்பப்பட்ட ஆலயமாதலால் புனித பெர்னதெத்தே இந்த ஆலயத்தின் பாதுகாவலியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1937 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22 ஆம் நாள் மங்கலக்குன்று பணித்தளம் புதிய பங்காகப் பிறப்பெடுத்தது. மிடாலக்காடும். காணாவூரும் இதன் கிளைப்பங்குகளாயின. அருட்பணி, தர்மநாதர் இப்பங்கின் முதல் பங்குத் தந்தையாக பொறுப்பேற்றார். 1946 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் நாள் பொட்டக்குழியும், மாங்கன்றுவிளையும் பூட்டேற்றி கிளைப்பங்கிலிருந்து பிரித்தெடுத்து மங்கலக்குன்று பங்குடன் இணைக்கப்பட்டது. 1968 இல் அருட்பணி. ஜோசப் அவர்களால் சகாயகிரி நம் பங்கின் கிளைப்பங்காக உயர்த்தப்பட்டது.

பங்கு வளர்ச்சியின் மற்றுமொரு மைல்கல்லாக 1969 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி மறைமாவட்டத்தைச் சேர்ந்த கொன்சாகா கன்னியர் சபை நம் மண்ணில் பங்குப்பணியோடு இணைந்த கல்விப் பணியாற்ற வரவழைக்கப்பட்டு கன்னியர் இல்லமும் பங்கு ஆலய வளாகத்தில் கட்டப்பட்டது. பங்கு வளர்ச்சியின் முதுகெலும்பான அருட்பணிப்பேரவை நமது பணித்தளத்தில் 1978 இல் அருட்பணி தொபியாஸ் அவர்களால் தொடங்கப்பட்டது. 12.02.1980 அன்று ஓடு வேய்ந்த நமது பழைய பங்கு ஆலயத்தை விரிவாக்கம் செய்யும் பணி அருட்பணி. செல்வராஜ் அவர்களால் தொடங்கப்பட்டு 16.01.1983 இல் மேதகு ஆயர். டாக்டர் ஆரோக்கியசாமி அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டது. மேலும் இந்நிகழ்வு புனித பெர்னதெத்துக்கு நமது ஆலயத்தை அர்ப்பணித்த நிகழ்வின் 50 ஆம் ஆண்டு நிறைவு பொன்விழா நன்றிப் பலியாகவும் சிறப்பிக்கப்பட்டது.

பங்கின் தொடக்கத்திலேயே அருள்மழை பொழியும் லூர்து அன்னை, புனித பெர்னதெத்துக்கு காட்சியளிக்கும் நிகழ்வை தத்ரூபமாக்கும் கெபி ஒன்று கட்டப்பட்டிருந்தது. நாளடைவில் பழுதடைந்த கெபி பல காலகட்டங்களில் சீரமைக்கப்பட்டு இறுதியாக இன்று கிறிஸ்தவர்கள் மட்டுமன்றி பிற மத மக்களும் உருக்கமாக செபிக்கும் இவ்வழகிய குருசடியாக அருட்பணி. சாலமோன் அவர்களால் கட்டி முடிக்கப்பட்டு, ஆயர் பதிலாள் பேரருள் சூசை அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டது. குருசடி புதுப்பொலிவுடன் கட்டி எழுப்பப்பட்ட அடுத்த ஆண்டிலிருந்தே புதிய ஆலயம் கட்ட வேண்டுமென்னும் எண்ணம் இறைமக்கள் மனதில் எழத் தொடகியது. பல கட்ட திட்டமிடுதலுக்குப் பின் 28.12.2012 அன்று மேதகு ஆயர். பேரருள் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அகர்தலா மறைமாவட்ட மேதகு ஆயர். பேரருள் ாமன் மொன்றாரோ அவர்கள் முன்னிலையில் புதிய ஆலயம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. பங்கு மக்களின் அயராத உழைப்பாலும், ஒத்துழைப்பாலும், பக்தர்கள் மற்றும் நல் உள்ளங்கள் பலரின் நன்கொடையாலும் புனித பெர்னதெத்தின் பரிந்துரையாலும் கட்டி எழுப்பப்பட்ட நமது ஆலயம் 15.05.2015 அன்று அன்றைய பங்கு தந்தை அருட்பணி. ஜோசப் ரொமால்டு முன்னிலையில் மேதகு ஆயர். பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டது.

நம் மங்கலக்குன்று பங்கு சமூகம் மற்றும் நம்மை சூழ்ந்து வாழும் சமூகப் பெண்களின் கல்வியறிவு மற்றும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு 2016 ஆம் ஆண்டு திருச்சி மறை மாநிலத்தை சார்ந்த புனித தெரரா கார்மல் சபை கன்னியர்கள், புனித தெரரா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை நம் மண்ணில் நிறுவி கல்விப்பணியோடு பங்கின் அருட்பணிகளிலும் இணைந்து பணியாற்றுவது இன்னும் சிறப்பு.

மங்கலக்குன்றின் மாட்சியை மண்ணகமெங்கும் பறைசாற்றும் நம் புனித பெர்னதெத் ஆலயம் இந்திய திரு அவையில் அமைந்துள்ள அனைத்து ஆலயங்களிலும் புனிதையின் பெயரால் அமைக்கப்பெற்ற முதல் ஆலயமாகும். அதன்பின் தொடர்ச்சியாக அருட்பணி. தர்மநாதர், அருட்பணி. ஏசுதாசன், அருட்பணி. தனிஸ்லாஸ் கோஸ்கோ, அருட்பணி, மரிய கிரகோரி, அருட்பணி. D. செபாஸ்டின், அருட்பணி. அத்தனேசியஸ் ரெத்னசுவாமி, அருட்பணி அல்போன்ஸ், அருட்பணி. சேவியர் ராஜமணி, அருட்பணி. ஜோசப் அருமை, அருட்பணி. ஜோசப், அருட்பணி, ஆசை மிக்கேல், அருட்பணி. தொபியாஸ், அருட்பணி. செல்வராஜ், அருட்பணி. . ஆசை, அருட்பணி. தேவசகாயம், அருட்பணி, சூசை மரியான், அருட்பணி, மரியதாசன், அருட்பணி. சாலமோன், அருட்பணி. சகாய ஜஸ்டஸ், அருட்பணி. ஜோசப் ரோமால்டு, அருட்பணி. தாமஸ் அருளானந்தம், அருட்பணி. ஆன்றனி அருள் ஜெரால்டு, அருட்பணி. பிரான்சிஸ் வின்சென்ட் என பல்வேறு இறைப்பணியாளர்கள் மங்கலக்குன்று பங்கின் வளர்ச்சியில் இன்றியமையா பங்காற்றியுள்ளனர். மேலும் குன்றின் மேல் இட்ட சுடராய் ஒளிரும் இவ்வாலயம் நம் பாதுகாவலியாம் புனித பெர்னதெத்தின் பரிந்துரையால் தொடர்ந்து இறைமக்கள் உள்ளங்களை ஒளிர்விக்கட்டும் !


© All Rights Reserved | Designed and Developed by MTL Webking Technology